தூத்துக்குடி மகனுடன் தனியாக வசித்து வந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சம்படி மேலத்தெருவை சேர்ந்தவர் செங்கமலம் (47). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவன் கணேசன் இறந்து விட்டார். 2 மகள்களை உறவினர் வீடுகளில் விட்டுவிட்டு மகன் கோமதிசங்கருடன் (9) செங்கமலம் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை செங்கமலம் வீட்டின் அருகே தரிசாக கிடக்கும் வயலில் ஆடைகள் களைந்த நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செங்கமலம் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில்  மகனுடன் செங்கமலம் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், இரவு வீட்டுக்குள் புகுந்து திண்ணைக்கு இழுத்து வந்து பலாத்காரம் செய்திருக்கலாம். அவர் எதிர்த்து போராடியதால் சரமாரியாக கட்டையால் தாக்கியதில் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் உடலை அருகிலுள்ள வயலில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.