ஐபிஎல் 12 சீசன்கள் முடிந்துள்ளன. இந்த 12 சீசனில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறையும் கோப்பையை வென்றுள்ளன. ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று குவித்து கொண்டிருக்க, ஆர்சிபி கேப்டன் கோலியோ ஒரு கோப்பைக்கே திக்கி திணறுகிறார்.

விராட் கோலியின் கேப்டன்சி மற்றும் ஆர்சிபி அணி நிர்வாகத்தின் தெளிவின்மை தான் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம். மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளை போல வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகள் ஆர்சிபி அணி வீரர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. ஒன்றிரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றாலும் கூட, அந்த வீரரை ஓரங்கட்டுவது, அடுத்த சீசனில் கழட்டிவிடுவது இவற்றையே வாடிக்கையாக கொண்டுள்ளது ஆர்சிபி. கோலி, டிவில்லியர்ஸை தவிர ஆர்சிபி அணியில் வேறு எந்த வீரரும் நிரந்தரமில்லை என்ற நிலை தான் உள்ளது.

ஆனால் இந்த சீசனில் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ் மாதிரியான சிறந்த வீரர்களை அணியில் எடுத்திருக்கும் ஆர்சிபி அணியின் கேப்டன் கோலி, இந்த சீசனுக்கான ஆர்சிபி  அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சமபலத்துடன் திகழ்வதாகவும் நல்ல பேலன்ஸான அணியாக திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். 2016க்கு பிறகு இப்போதுதான் ஆர்சிபி அணி நல்ல பேலன்ஸான அணியாக உள்ளதாக கோலி தெரிவித்தார்.

ஆனால் எப்பேர்ப்பட்ட வீரர்களை கொண்ட அணியாக இருந்தாலும், அணுகுமுறையை மாற்றாதவரை, ஆர்சிபிக்கு தோல்விதான் என்பதை பறைசாற்றும் விதமாக கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் கம்பீர், விராட் கோலி ஆர்சிபி அணி பேலன்ஸாக இருப்பதாகவும் அணி மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் இந்நேரம் ஆடும் லெவனை தீர்மானித்திருப்பார்கள். அணி திருப்தியளிக்கும் விதமாக இருக்கும்பட்சத்தில், ஒரு கேப்டனாக நிதானமாக செயல்பட வேண்டும். முந்தைய சீசன்களில் ஆடும் லெவன் காம்பினேஷன் சிறப்பாக இல்லையென்பதால் தான் ஆர்சிபி அணி தொடர் மாற்றங்களை செய்துவந்தது. இப்போது அணி திருப்தியளித்தால், ஆடும் லெவனை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது. 

இந்த விஷயத்தில் தோனிக்கும் கோலிக்கும் இடையேயான பெரிய வித்தியாசம் என்னவென்றால், தோனி ஒரு அணி காம்பினேஷனில் ஆடினால், நன்றாக ஆடினாலும் ஆடாவிட்டாலும், எந்த வீரரையும் அணியிலிருந்து சும்மா சும்மா நீக்காமல், குறைந்தது 6-7 போட்டிகளில் ஆட வாய்ப்பளிப்பார். ஆனால் ஆர்சிபி அணி, தொடர்ச்சியாக அணி காம்பினேஷனை மாற்றிக்கொண்டே இருக்கும். அந்த அணியின் ஆடும் லெவன் மீது அந்த அணிக்கே நம்பிக்கையிருக்காது. சந்தேகத்துடன் தொடர் மாற்றங்களை செய்யும். 

அதனால் ஆர்சிபி அணிக்கு நான் சொல்வது என்னவென்றால், ஆடும் லெவனை உறுதி செய்து களம்கண்டால், அந்த காம்பினேஷன் ஆரம்பத்தில் சரியாக ஆடாமல் தோல்வியை தழுவினாலும், காம்பினேஷனை மாற்றாமல் குறைந்தது 6-7 போட்டிகளில் அதே அணியுடன் ஆட வேண்டும். அப்போதுதான், வீரர்களுக்கு தங்கள் அணிக்கு போட்டியை ஜெயித்து கொடுக்க வேண்டும் என்ற உணர்வு வரும். ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் வாய்ப்பளித்தால், எந்த வீரருக்கும் அந்த உணர்வு வராது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.