ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடம் புரியாமல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் கரங்களால் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவியின் விபரீத முடிவை குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 
திருப்புவனம் அருகே உள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுபிக்ஷா. 10 ஆம் வகுப்பு படித்து வந்த சுபிக்ஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆட்டோ ஓட்டுனரான தந்தை சத்தியமூர்த்தி, தாய் தனலட்சுமியின் செல்ல மகள் சுபிக்ஷா. மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சுபிக்ஷா படிப்பில் படுசுட்டி. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி இவரது திறமைக்கு சான்றாக வீட்டை அலங்கரிக்கின்றன. கேடயங்களும், சான்றிதழ்களும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்ற சுபிக்ஷா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரங்களால் பரிசு பெற்ற காட்டப்பட்டுள்ளன.

 பத்தாம் வகுப்பு படித்து வந்த சுபிக்ஷா ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். ஆன்லைன் பாடங்கள் புரியவில்லை என்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு என்பதால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியாது என்றும் குடும்பத்தினருடன் கவலையை வெளிப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. கவலையில் இருந்த சுபிக்ஷாவை சமாதானப்படுத்தி பெற்றோர் உற்சாகப்படுத்தி உள்ளனர். எனினும் சுபிக்ஷாவின் உடலை தாயின் சேலையில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் மீட்டுள்ளனர். குடும்பத்தினர் கல்வியில் சிறந்து மாலை மரியாதையுடன் வீடு திரும்புவார் என எதிர்பார்த்துக் காத்திருந்த பெற்றோர் சுபிக்ஷாவின் உடலுக்கு மாலை அணிவித்து கதறி அழுதனர்.