ஓசூர் அருகே பாஜக இளைஞரணி நிர்வாகி சினிமா பாணியில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் ரங்கநாதன் (35). இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜக கட்சியில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று ரங்கநாதனின் மகன் தனஞ்செயனின் பிறந்த நாள் என்பதால் பேக்கரி கடைக்கு சென்று கேக் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த அக்கும்பல் ரங்கநாதனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த ரங்கநாதனுக்கு கீதா(25) என்ற மனைவியும், ரிஷிகேஷ் (3), தனஞ்செயன் (1) என்ற 2 மகன்களும் உள்ளனர்.