தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரில் இன்று ஊராட்சி ஒன்றிய, மாவட்ட ஊராட்சி தனி அலுலவர்களின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து அரசு சட்ட முன்வடிவைக் கொண்டு வந்தது. இந்த சட்ட முன்வடிவின் மீது திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் பேசுகையில், “மாநகராட்சி மேயர் தேர்தல் நான்கு ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்டு, உள்ளாட்சி பிரதிநிதிகளே இல்லாமல் மாநகராட்சி செயல்பட்டுவருகிறது. இந்த கொரோனா காலத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்திருந்தால், கொரோனா பாதிப்பை குறைத்திருக்க முடியும். ஆனால், தமிழக அரசுக்கு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் அந்த எண்ணமே இல்லை.

சென்னை மாநகர பகுதியில் இதுவரை 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 3,004 பேர் இறந்துள்ளனர். உலகில் 150 நாடுகளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, தற்போது ஒரே மாநகராட்சியில் மட்டும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தனி அலுவலர்களின் பணிக் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு கூறும் காரணங்கள் நகைச்சுவையாக உள்ளன. இதை வைத்து பார்க்கும்போது இந்த தமிழக அரசுக்கு தேர்தலே நடத்தும் திட்டம் இல்லை.


1996-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் 25 ஆண்டுகள் கழித்து மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. எனவே, 2021ல் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வந்த பிறகுதான் இந்த மாநகராட்சி தேர்தல் நடக்கும்” என மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.