மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் நடந்த சோதனைகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஒரு குழு சார்ந்தவர்களாக சந்தேகிக்கப்படும் 11 பயங்கரவாத செயற்பாட்டாளர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.

இந்தியாவில் முக்கியமான இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த இந்த குழு திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கு வங்கத்தில் எட்டு பேரையும், கேரளாவில் மூன்று பேரையும் கைது செய்தது, மேலும் சில டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்களை அவர்களிடம் இருந்து கைப்பற்றியது.

தேசிய தலைநகர் மண்டலம் உட்பட இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்துவதற்காக தனிநபர்கள் சமூக ஊடகங்களில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா பயங்கரவாதிகளால் தீவிரமயமாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அமைப்பு தீவிரமாக நிதி திரட்டிக் கொண்டிருந்தது என்றும் அவர்களில் சிலர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்க முயற்சிக்க புதுடெல்லிக்கு செல்ல திட்டமிட்டனர் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.