ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், டெல்லி கேபிடள்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், இரண்டாவது ஓவரிலேயே ரன் அவுட்டாகி, ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து 4வது ஓவரில் பிரித்வி ஷா மற்றும் ஹிம்ரான் ஹெட்மயர் ஆகிய இருவரையுமே ஒற்றை இலக்கத்தில் ஒரே ஓவரில் வீழ்த்தி அனுப்பினார் ஷமி.

13 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடள்ஸ் அணியை, இக்கட்டான நிலையிலிருந்து காக்க வேண்டிய பொறுப்பை ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் சிறப்பாக செய்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர்களாக விளாச, ரிஷப் பண்ட்டும் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 3 சிக்ஸர்களுடன் 32 பந்தில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் அக்ஸர் படேல், அஷ்வின் ஆகியோர் ஒருமுனையில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி வரை களத்தில் நின்று அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 

18 ஓவரில் டெல்லி கேபிடள்ஸ் அணி வெறும் 100 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. கடைசி 3 ஓவரில் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். ஜோர்டான் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசிய ஸ்டோய்னிஸ், டெத் ஓவர்களை நன்றாக வீசக்கூடிய கோட்ரெலின் 19வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். 19 ஓவர் முடிவில் 127 ரன்கள் அடித்திருந்தது.

ஷமி மற்றும் கோட்ரெல் ஆகிய இருவருக்கும் கோட்டா முடிந்ததால், கடைசி ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசினார். கிறிஸ் ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் காட்டடி அடித்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். முதல் பந்தில் சிக்ஸரும் அடுத்த 2 பந்தில் பவுண்டரிகளும், ஐந்தாவது பந்தில் மறுபடியும் ஒரு சிக்ஸரும் விளாசிய ஸ்டோய்னிஸ், 20 பந்தில் அரைசதம் விளாசினார். கடைசி பந்தில் 2வது ரன் ஓடும்போது ஸ்டோய்னிஸ் ரன் அவுட்டானார். ஆனால் அந்த பந்து நோ பால் என்பதால், நோ பாலுக்கு ஒரு ரன் கிடைத்தது. நோ பாலுக்கு வீசப்பட்ட ரீ பாலில் 3 ரன்கள் அடிக்கப்பட்டது. கடைசி ஓவரில் மட்டும் ஸ்டோய்னிஸின் அதிரடியால் 30 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 157 ரன்களை அடித்து, 158 ரன்களை பஞ்சாப்பிற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி அணி.

130 ரன்கள் என்ற ரேஞ்சில் டெல்லியை சுருட்டிவிடலாம் என்று தான் பஞ்சாப் அணி நினைத்திருக்கும். ஏனெனில் அந்தநிலையில் இருந்தது. ஆனால் டெத் ஓவர்களில் ஸ்டோய்னிஸ் செம காட்டு காட்டிவிட்டார்.