மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களில் உள்ள பயன்களைப் பட்டியலிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார். அந்த மசோதாக்களை ஏன் அதிமுக ஆதரிக்கிறது என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று வேளாண் சட்டங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இது அதிமுகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.


இந்த மசோதாவில் மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என விசித்திரமான இரட்டை நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளதா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தங்கள் சுயநலத்துக்காக இப்படி நடந்துகொண்டதாகக் கூறி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் அதிமுகவை விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அதிமுகவை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “மத்திய அமைச்சராவதற்கு ‘நோட்டாஜி’யின் பார்வை படாதா என காத்திருக்கும் ஜுனியர் தர்மயுத்தம், விவசாய விரோத சட்டங்களை மக்களவையில் ஆதரித்தார். தானும் நேர்மையான அடிமையே என ஜி-யிடம் பெயரெடுக்க அடிமை முதல்வரும் முட்டுக்கொடுத்தார். ஆனால், மாநிலங்களவையில் மட்டும் எதிர்ப்பு நாடகம் எதற்கு?

பதவியைத் தக்கவைக்க மக்களவையில் காலைப்பிடிப்பதும் – மாநிலங்களவையில் கையைப் பிடிப்பதும் தமிழக விவசாயிகளிடம் எடுபடாது. விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் உங்களுக்கு அடுத்து எதிர்க்கட்சி வரிசை கூட கிடைக்காது, துரோகிகள் வரிசைதான் அடிமைகளே.” என ட்விட்டரில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.