இரட்டைஇலை சின்னம் வழக்கில் லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரனை மத்திய அரசு கைது செய்தது.அதே மத்தியில் ஆளும் பாஜக அரசு டிடிவி தினகரனுக்கு தனிவிமானம் அனுப்பி டெல்லிக்கு அழைத்து பேசியிருக்கிறது.தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் தமிழக அரசியலில் காட்சிகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்க போகிறது என்பதற்கு சாட்சி டிடிவி டெல்லி பயணம் ரெம்பவே முக்கியத்துவம் வாய்ந்திருக்கிறது.இவரது பயணம் அதிமுக அமைச்சர்கள் முதல் சசிகலாவை எதிர்த்து பேசியவர்கள் வரை கலக்கமடைந்து போயிருக்கிறார்கள்.

டிடிவி தினகரன் டெல்லி பயணம் என்ன நடந்தது.?

தமிழகத்தில் இன்னும் 6மாதத்தில் திமுக ஆட்சி என்கிறார் ஸ்டாலின்.உளவுத்துறை அறிக்கை முதல் ஐபேக் டீம் சர்வே வரைக்கும் திமுக அசால்ட்டாக ஆட்சியை கைப்பற்று என்று சொல்லுகிறது.ஆனால் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற போட்டி இன்னும் முடிந்தபாடில்லை. கட்சிக்கு நான் என்கிறார் ஓபிஎஸ்.. இல்லை இல்லை கட்சிக்கும், ஆட்சிக்கும் நான் தான் என்கிறார் இபிஎஸ்.இந்த நீயா? நானா? போட்டியில் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது பாஜக.பாஜகவின் இலக்கு தமிழகத்தில் தாமரை மலரவேண்டும். அதற்குள்ளாக திமுகவை அழிக்க வேண்டும்.அதன் பிறகு அதிமுகவை எளிதாக அழித்துவிடலாம் என்று கணக்கு போட்டு பாஜக தெளிவாக காய்நகர்த்தி வருகிறது.

ஜனவரி27ம் தேதி சசிகலா பெங்களுர் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலுக்கு பிறகு நிறையவே அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சசிகலா முதல்வராக வேண்டும்என்று முதல் குரல் கொடுத்தவர் ஜெ.சமாதியில் முதல் ஆளாக மொட்டை போட்டவர் ஆர்பி.உதயக்குமார்.எடப்பாடி முதல்வரானதும் எடப்பாடி பக்கம் முழுவதுமாக சாய்ந்து ஓபிஎஸ்க்கு எதிராக குரல்கொடுத்தார்.தற்போது சசிகலா சிறையில் இருந்து வந்ததும் அவரை அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக சொல்லப்படுகிறது.இதனை கேட்ட அமைச்சர் ஜெயக்குமார் நீங்கள் எல்லாம் சொன்னதால் தானே சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று பேசினேன். இப்போது நீங்கள் எல்லாம் அவரை ஆதரித்துபேசுகிறீர்கள் என்று அந்த கூட்டத்தில் பொங்கியெழுந்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

சசிகலா சிறையில் இருந்து வரும் போது அதிமுக வின் பொதுச்செயலாளராக தான் வெளிவருவார் என்று அதிமுக, அமமுக உள்ளிட்ட நிர்வாகிகள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கான வேலைகளை பாஜக ஆரம்பித்து விட்டது.கட்சிக்கு சசிகலா, ஆட்சிக்கு ஓபிஎஸ் என்று டெல்லியில் பாஜக டீல் பேசியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

டெல்லி சென்ற டிடிவி பாஜகவின் மூத்த தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேசியதில் இந்த தகவல்கள் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.அப்போது.. ‘அமமுக கலைக்கப்பட்டு அதிமுகவோடு இணைக்கவேண்டும்.சசிகலா ஓபிஎஸ் இபிஎஸ் என ஆளுக்கொரு திசையில் பயணிக்க கூடாது. ஒரே அணியில் அதிமுக இரட்டை இலை சின்னம் என்று தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள் பாஜக தலைவர்கள். டிடிவி தரப்பில் இருந்து நிறைய கண்டிசன் போடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.பாஜக டிடிவி தினகரன் டீல் நல்ல படியாக முடிந்து சென்னை திரும்பியிருக்கிறார்.தமிழகத்தில் அரசியல் காட்சி மாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க போகிறது.இவரது டெல்லி பயணத்தால் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லாம் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.மீண்டும் சசிகலா அதிமுகவில் கோலோச்சப்போகிறார் அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் கதி என்னவாக இருக்கும் என்கிற பட்டிமன்றம் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. டெல்லியில் இருந்து ஒபிஎஸ் ,இபிஎஸ்க்கு இன்னும் ஓரிரு நாட்களில் அழைப்பு வரும் என்று சொல்லப்படுகிறது.அதிமுக இணைப்பு நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் டெல்லியில் பாஜக ஊன்றியிருக்கிறது. அதன் இணைப்பு விழா சென்னையில் பிரமாண்டாக நடைபெற இருக்கிறது என்கிறார் அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களில் ஒருவர்.