30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில்;- மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக ரூ.3,737 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த போனஸ், வரும் விஜயதசமிக்கு முன் ஒரே தவணையாக, நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.